ஜெயலலிதாவின் புதிய சிலை தயார்

Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2018 (16:12 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பழைய சிலை சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் கேலி செய்யப்பட்டதால் உருவாக்கப்பட்ட புதிய சிலையின் பணிகள் முடிவடைந்துள்ளன.

கடந்த 2016 ஆம் ஆண்டு மர்மமான முறையில் இறந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வின் 70வது பிறந்த நாளையொட்டி இந்த வருடம் பிப்ரவரி மாதம் 24ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெ.வின் 70 அடி உயர வெண்கல சிலையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோர் திறந்து வைத்தனர். ஆனால், அந்த சிலையை கண்ட அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அந்த சிலை எந்த விதத்திலும் ஜெ.வின் சாயலில் இல்லை. அதனால் சமூக வலைதளங்களில் பலர் மீம்ஸ்களை உருவாக்கி உலவ விட்டனர்.

இதில் ஒருபடி மேலேப் போய் முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், ’சிலைக்கு அருகே இது தான் ஜெயலலிதா சிலை என போர்டு வைக்க வேண்டும்’ என விமர்சனம் செய்தார். இதனால் அதிமுக தொண்டர்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர். எனவே அதிமுக அரசு அதற்கு வருத்தம் தெர்வித்து சிலை உடனடியாக மாற்றப்படும் என அறிவித்தது.

ஆந்திராவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் இந்த சிலை வடிவமைக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. மேலும் சிலை ஜெயலலிதா போல தத்ரூபமாக இருக்க வேண்டும் எனவும் அதிமுக சார்பில் வலியுறுத்தப் பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து வேகமாக நடைபெற்ற சிலை வடிக்கும் பணி தற்போது நிறைவுற்றுள்ளது. இந்த புதிய சிலை அனைவருக்கும் திருப்தியளிக்கும் விதத்தில் வந்துள்ளதால் அதிமுக தலைவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனவே தற்போது அந்த சிலையின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்தச் சிலை, ஜெ. தனது வழக்கமானப் பாணியில் சிரித்த முகத்தோடு தொண்டர்களைப் பார்த்து இரட்டை இலை சின்னத்தை காட்டுவது போல் அமைந்துள்ளது.

எனவே கூடிய விரைவில் அந்த சிலை அதிமுக தலைமையகத்தில் வைக்கப்படும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்