எடப்பாடி, ஓபிஎஸ் வருகை : விதிமுறைகளை மீறி கட் அவுட், பேனர்கள் (வீடியோ)
ஞாயிறு, 21 அக்டோபர் 2018 (19:41 IST)
கரூரில், இன்று நடக்கும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் இல்ல விழாவில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
கரூர் மாவட்ட, அ.தி.மு.க., செயலாளரான, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மகள், அக்ஷய நிவேதாவின் பூப்பு நன்னீராட்டு விழா இன்று மாலை, 6:00 மணிக்கு, கரூர், சேலம் பைபாஸ் சாலையில் உள்ள, அட்லஸ் கலையரங்கில் நடக்கிறது. நாளை நடக்கவுள்ள அவர் தம்பி சேகர் மகள் தாரணி - சிவா திருமண வரவேற்பும் கலையரங்கில் நடந்தது.
இந்த விழாவில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உட்பட அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். சேலத்தில் இருந்து கார் மூலம், முதல்வர் இன்று கரூர் வருகிறார். மாலை, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், இரவு திருச்சி செல்கிறார். இதனையொட்டி, முதல்வர் வருகைக்காக, ஆங்காங்கே மிகவும் பிரமாண்ட பிளக்ஸ் மற்றும் தோரணங்களோடு, கட்சிக்கொடிகளும், நுழைவு வாயில்களும் பல கோடி அளவில் செலவு செய்யப்பட்டு, வழி நெடுகிலும் அமைக்கப்பட்டிருக்கின்றது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான தேசிய நெடுஞ்சாலை எண் 7 ல், ஆங்காங்கே நான்கு வழிசாலைகளையும் நடுவே உடைத்து முதல்வர் வளைந்து செல்ல கஷ்டப்படுவார் என்று கரூர் மாவட்ட நிர்வாகம், நான்கு வழிச்சாலைகளை உடைத்ததோடு, அதில் பேரிகார்டுகள் வைத்துள்ளனர்.
மேலும், ஆங்காங்கே அணுகு சாலைகளின் ஒரத்தில் கழிவு நீர் செல்வதற்காக, வழி இருக்கும் நேரத்தில் அந்த வழிகளையும் ஆக்கிரமித்ததோடு, அதில் மண்ணை நிரவி, அந்த பகுதியில் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும், கல்லூரி மற்றும் அரசு பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் இந்த தனி ஒருவர் அமைச்சரின் வீட்டு இல்ல விழாவிற்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக பா.ம.க மற்றும் பிற கட்சி நிர்வாகிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதுபோக, ஆங்காங்கே மின்சாரம் திருட்டுத் தனமாகவும் மின்சாரம் எடுத்து வருவதாகவும், நகராட்சி ஊழியர்களும், அங்கே பணிகளுக்காக நியமிக்கப்பட்டு, பணிகள் செய்து வருவதாகவும், காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
விடுமுறை தினத்தன்றும் அரசு அதிகாரிகள் இங்கே பணியில் ஈடுபடுத்தி வருவதாகவும், இங்கே உள்ள இரு தனியார் பள்ளிகள் மற்றும் ஒரு தனியார் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு, அந்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் வாகனங்கள் நிறுத்தி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பேட்டி : பி.எம்.கே.பாஸ்கரன் – மாநில துணை பொதுச்செயலாளர் – பா.ம.க