அதிமுக அணியில் இணைந்து செயல்பட விரும்புவதாக எம்ஜிஆர்அம்மாதீபாபேரவை சார்பாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக அமைச்சர்கள் தலைதூக்கி செய்த அராஜகங்கள் ஒருபுறம் என்றால், ஜெயலலிதாவின் ரத்த வாரிசு என்ற பெயரில் அவரின் அண்ணன் மகள் ஜெ தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் ஆகியோர் செய்த அலப்பறைகள் தமிழக அரசியலில் அனைவருக்கும் பொழுதுபோக்காக அமைந்தது.
அதிமுக வின் மீது கொண்ட அதிருப்தியால் புதிதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பைத் துவங்கினார் ஜெ தீபா. அதில் அவருக்கும் அவரது கணவருக்கும் கருத்து மோதல்கள் (?) வர மாதவன் புதிதாக ஒரு கட்சி ஆரம்பித்தார். ஜெ தீபா மற்றும் அவரது டிரைவர் ராஜா ஆகியோர் கூட்டணி அமைத்து மாதவன் மீது திருட்டுப் பழி சுமத்தினர். அதன் பின் ராஜா பேரவையில் ஒதுக்கி வைக்கப்பட்டு மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இந்த நகைமுரணான நாடகங்கள் தமிழக மக்களுக்கு நல்ல பொழுதுபோக்காக அமைந்தாலும் தீபா இன்னும் லெட்டர்பேடு கட்சிக்காரராகவே உள்ளார்.
இந்நிலையில் திருவாரூரில் நடக்க இருந்த இடைத்தேர்தலில் அதிமுக வுக்கு ஆதரவாக செயல்படப்போவதாக தீபா அறிவித்தார். இது சம்மந்தமாக சேலத்தில் நடைபெற்றக் கூட்டத்தில், அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் தீபா செய்தியாளர்களிடம் ‘ அதிமுக எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா இருவரும் வாழக்கையை அர்ப்பணித்து உருவாக்கிய மிகப்பெரிய இயக்கம். ஜெயலலிதாவின் மரணத்திற்கு சசிகலா குடும்பம்தான் காரணம். அவர்களை தமிழக மக்கள் ஒதுக்கி வைத்து விட்டார்கள். தொண்டர்களின் நல்லாதரவுடன் சிறு இயக்கத்தை நடத்தி வந்தேன். அதற்கு இவ்வளவு பெரிய ஆதரவு தந்தமைக்கு நன்றி. இனி அதிமுக வோடு இணைந்து செயல்பட இருக்கிறேன். ’ எனத் தெரிவித்தார்.
அதிமுக மற்றும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என இரண்டு கட்சிகளுக்கும் மக்கள் மனதில் எந்த இடமும் இல்லை என்ற சூழ்நிலையில் இந்த இரண்டு கட்சிகளின் இணைப்பு தமிழக அரசியலில் எந்த பாதிப்பையும் உருவாக்காது எனவும் பூஜ்யமும் பூஜ்யமும் சேர்ந்தால் மீண்டும் பூஜ்யம்தான் கிடைக்கும் என்றும் அரசியல் வடடாரத்தில் பேச்சுகள் உருவாகியுள்ளன.