ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு..! தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!!

Senthil Velan
வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (14:46 IST)
தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  
 
தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன.  இவற்றில் 2024-2025- கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை செய்வதற்கான கால அளவு மாணவர்களின் நலன் கருதி 31.08.2024 வரை ஏற்கனவே வழங்கப்பட்டது. தற்பொழுது மாணவர்களின் நலன் கருதி 30.09.2024 வரை நீட்டிக்கப்படுகிறது. 
 
இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மாணவர்கள் தாம் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவை தெரிவு செய்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750 வழங்கப்படும். தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா மூடூ காலணிகள் (Shoes), விலையில்லா பயிற்சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி இவை அனைத்தும் வழங்கப்படும்.
 
சென்ற ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில் 85 சதவிதம் பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இன்றைய தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில் 4.0 உள்ளிட்ட பல நவீன தொழிற்பிரிவுகளில் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. 


ALSO READ: அதிமுக தொடர்ந்த அவதூறு வழக்கு.! நீதிமன்றத்தில் ஆஜரான சபாநாயகர் அப்பாவு..!!
 
இது தொடர்பாக ஏதேனும் ஐயம் ஏற்படும் நேர்வில் கீழ்காணும் அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். அலைபேசி எண் மற்றும் வாட்ஸ் அப் எண்: 9499055689 அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்