செப்டம்பர் 29 அன்று, லலித் மோடி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விற்பனை செய்யப்பட உள்ளதாக நிறைய வதந்திகள் வந்துள்ளன. இதற்கு முன்பு இது மறுக்கப்பட்டாலும், இப்போது உரிமையாளர்கள் அதை விற்க முடிவு செய்ததாகத் தெரிகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சீசனில் ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வென்றது. வலுவான ரசிகர் பட்டாளம், சிறந்த அணி மற்றும் நிர்வாகம் என அனைத்தும் ஆர்சிபிக்கு மிகப்பெரிய பலம். இது முழுவதுமாக விற்பனைக்கு வரும் ஒரே அணியாக இருக்கலாம்.
டைஜியோ பிஎல்சி என்ற நிறுவனம், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் மூலம் ஆர்சிபி அணியை நிர்வகித்து வருகிறது. ஜூன் மாதத்தில் வெளியான ஒரு செய்தியின்படி, டைஜியோ நிறுவனம் ஆர்சிபி அணியை விற்பது உட்பட பல்வேறு வழிகளை ஆராய, ஆலோசகர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
விராட் கோலியின் வலுவான பிராண்டிங் மற்றும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் ஆகியவை ஆர்சிபி-யை முதலீட்டாளர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான ஒரு அணியாக மாற்றியுள்ளது. இந்த விற்பனை, ஐபிஎல் அணிகளின் மதிப்புக்கு ஒரு புதிய உச்சத்தை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.