சமீபத்தில் நடந்த ஐஏஎஸ் முதன்மை தேர்வில் கலந்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரி சபீர்கரீம் புளூடூத் மூலம் நூதன முறையில் காப்பியடித்தபோது பிடிபட்டு கைது செய்யப்பட்டார். இவர் காப்பியடிக்க உதவியதாக இவருடைய மனைவி ஜாய்சி மற்றும் ஐஏஎஸ் பயிற்சி மையம் நடத்தி வரும் பேராசிரியர் ராம்பாபு ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது
இந்த நிலையில் நேற்று ஜாய்சி, ராம்பாபு ஆகியோர்களை கைது செய்ய தமிழக காவல்துறையினர் ஐதராபாத் சென்றனர். ஜாய்சி தன்னுடைய ஒன்றரை வயது மகனுடன் கைது செய்யப்பட்டார். ஒன்றரை வயது மகனுடன் அவரை நீதிமன்றத்தில் போலிசார் ஆஜர்படுத்தினர்.
ஜாய்சி மற்றும் ராம்பாபு ஆகிய இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதால் எந்த பாவமும் அறியாத ஒன்றரை வயது கைக்குழந்தையும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சபீர்கரீம் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவரது ஐபிஎஸ் அந்தஸ்து ரத்து செய்யப்படும் என தெரிகிறது.