இன்று இந்தியாவின் முக்கியப் பண்டிகையான தீபாவளி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக தேவைப்படும் வெடிபொருட்களில் சுமார் 90 விழுக்காடு, விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
பல சவால்களுக்கு மத்தியிலும், இந்த ஆண்டு சுமார் ரூ.7,000 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு, நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டன. இது கடந்த ஆண்டு ரூ.6,000 கோடி விற்பனையை விட ரூ.1,000 கோடி அதிகம் ஆகும்.
கடந்த பத்து நாட்களாக பட்டாசு விற்பனை அபரிமிதமாக இருந்தது. குறிப்பாக, டெல்லியில் பட்டாசு வெடிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதால், சுமார் ரூ.400 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் உடனடியாக அங்கு அனுப்பப்பட்டன.