தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்களில், 'ஆன்லைன்' முன்பதிவு செய்து பயணிக்கும் பயணியரை ஊக்குவிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நீண்ட துாரம் செல்லும் அரசு பஸ்களில் பயணிக்க, https://www.tnstc.in மற்றும் அதன் மொபைல் செயலி வாயிலாக முன்பதிவு செய்யப்படுகிறது. 90 நாட்கள் முன்னரே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. தினமும் சராசரியாக, 20,000 இருக்கைகள் முன்பதிவு செய்யப்படுகின்றன.
கோடை விடுமுறையையொட்டி, சிறப்பு குலுக்கல் முறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்.,1 முதல் ஜூன் 15 வரை, 'ஆன்லைனில்' முன்பதிவு செய்து பயணிக்கும் பயணியரில், சிறப்பு குலுக்கலில், 75 பேர் தேர்வு செய்யப்பட்டு, சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.
முதல் பரிசாக 25 பேர், தமிழக அரசு போக்குவரத்து பஸ்களில், முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பஸ்களிலும், முன்பதிவு செய்து, ஒரு ஆண்டில் 20 முறை இலவச பயணம், எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். இரண்டாவது பரிசாக, 25 பேர் முன்பதிவு செய்து, 10 முறை, மூன்றாவது பரிசாக 25 பேர் ஐந்து முறை, இலவசமாக பயணிக்கலாம். அதாவது, குலுக்கலில் தேர்வு செய்யப்படுவோர், வரும் ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஜூன் வரை பயணிக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.