மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

Siva

சனி, 22 மார்ச் 2025 (09:35 IST)
மார்ச் 31ஆம் தேதியுடன்  கட்டணமில்லா பயண அட்டைகள் காலம் முடிவடைவதால் இதுகுறித்து தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
 
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில், மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இணையதளம் வாயிலாக கட்டணமில்லா பயண அட்டைகளை பெறும் வசதி, முதல்கட்டமாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 7.9.2023 அன்று முதல் அமல்படுத்தப்பட்டது.
 
பயனாளிகள், இத்திட்டத்தின் வாயிலாக எவ்வித சிரமுமின்றி தங்களது இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள அரசு இ-சேவை மையம் அல்லது www.tn.e.sevai என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து கட்டணமில்லா பயண அட்டைகளை பதிவிறக்கம் செய்து பயன் பெற்று வருகின்றனர்.
 
மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு உட்பட்ட பயனாளிகளுக்கு 2025-26-ம் நிதி ஆண்டில் இணையதளம் வாயிலாக புதுப்பிக்க ஏதுவாகவும், மேலும் இவ்வசதியினை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள பயனாளிகளும் பயன்பெறும் வழியில், இதர 6 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் (விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலி) விரிவுபடுத்த ஏதுவாகவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
 
இதற்கு போதிய கால அவகாசம் தேவைப்படுவதால், ஏற்கனவே பயனாளிகள் பயன்படுத்தி வரும் 31.3.2025 வரை செல்லத்தக்க கட்டணமில்லா பயண அட்டைகளை, 30.6.2025 வரை, மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணம் செய்யும் வகையில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்