கோவை வேளாண்மைக் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவரின் திருமணமாகாத இரு மகள்கள் பிரபல ஆன்மீகவாதியான ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையத்தில் கட்டாயப்படுத்தி சன்னியாசிகளாக ஆக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது.
இந்தப் புகார் குறித்து ஈஷா மையத்தில் கேட்டபோது நிர்வாகி ஒருவர், ’அந்தப் பெண்கள் விரும்பியே இங்கு தங்கியிருப்பதாகவும், அந்தப் பெண்கள் விரும்பினால் பெற்றோருடன் செல்லலாம் என்றும் யாரும் அவர்களைத் தடுக்கவில்லையென்றும்’ கூறினார்.
இந்நிலையில் ஈஷா யோகா மையத்தில் பொள்ளாச்சி பகுதியின் ஒருங்கிணைப்பாளராக 8 ஆண்டுகள் பணியாற்றிய செந்தில் என்பவர், அந்த மையத்தின் மீது பல திடுக்கிடும் புகார்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செந்தில், ஈஷா யோகா மையத்தில் ஏராளமானவர்களுக்கு மூளைச்சலவை செய்து பிரம்மசரியம் மேற்கொள்ள வைத்திருப்பதாக புகார் தெரிவித்தார்.
மேலும் ஈஷா சம்கிருதி பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுவர்களை கூட கட்டாயப்படுத்தி பிரம்மசரியம் ஏற்க வைப்பதாகவும், யாரையும் கட்டாயப்படுத்தியோ, மூளைச்சலவை செய்தோ பிரம்மசரியம் ஏற்க வைப்பதில்லை என யோகா மையத்தினர் கூறுவது முற்றிலும் பொய்யானது எனவும் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ’ஈஷா யோகா மையத்தில் சுவாமி ஏகாக்ரா உள்ளிட்ட பலர் மர்மமான முறையில் உயிரிழந்து இருக்கின்றனர். அவை மூடி மறைக்கப்படுவதோடு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. சுவாமி ஏகாக்ரா மனநிலை சரியில்லாமல் தற்கொலை செய்ததாக அவரது பெற்றோர்களை யோகா மையத்தினர் சொல்ல வைத்தனர். மனநலம் சரியில்லாத ஒருவருக்கு எப்படி பிரம்மசரியம் ஏற்க முடியும்?” என்று கூறியுள்ளார்.