நடிகர் விஜய் கடந்த ஆண்டு "தமிழக வெற்றி கழகம்" என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், அந்த கட்சியின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தலுக்கு இந்த கட்சி தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், "தமிழக வெற்றி கழகம்" ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டு தொடக்க விழா பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை புஸ்ஸி ஆனந்த் செய்து வருகிறார்.
இந்த விழாவில் கலந்து கொள்ளும் விஜய், தமிழக வெற்றி கழகத்தின் பணிகளை தீவிரப்படுத்த, 3 லட்சம் பேருக்கு பதவி வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே 95 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், விஜய் கட்சியில் மொத்தம் 28 அணிகள் உள்ளன. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 3 லட்சம் பேருக்கு பதவிகள் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுவதால், இது மற்ற அரசியல் கட்சிகளின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.