தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது - உயர் நீதிமன்றம் மதுரை கிளை!

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (16:11 IST)
முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
 
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் "2013ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற ஏராளமானவர்கள், அப்போதிருந்த 'வெயிட்டேஜ்' முறையால் ஆசிரியர் பணியில் சேர முடியவில்லை. அவர்களுக்குத் தற்போதுவரை பணி வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதனால், அவர்கள் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இளநிலை பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப தமிழ்நாடு அரசு கடந்த ஜூன் 23ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
"தற்காலிக ஆசிரியர்களைத் தேர்வு செய்வது தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட அறிவிப்பு ஏதுமில்லை. இதனால், அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்களுக்குத் தேவையானவர்களை பணியில் நியமித்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தகுதியற்றவர்கள் பணிக்குச் சேரும் வாய்ப்புள்ளது.
 
இதன் மூலம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் பணிவாய்ப்பைப் பெற இயலாத சூழல் ஏற்படும். ஆகவே தமிழ்நாடு அரசு 23ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பை ரத்துசெய்ய உத்தரவிட வேண்டுமென" கோரியிருந்தார்.
 
இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "முறையான வழிகாட்டுதல்கள் இன்றி ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது. இது ஏற்கத்தக்கதல்ல. இது ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களைப் பணியில் அமர்த்த வாய்ப்பாக அமைந்துவிடும்" என்று குறிப்பிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க தமிழ்நாடு அரசின் சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை நடத்தும் பள்ளிக்கூடங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு 13,300 ஆசிரியர்களைத் தற்காலிகமாக நியமிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்