நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை :வானிலை ஆய்வு மையம்..!

Siva
ஞாயிறு, 3 நவம்பர் 2024 (07:04 IST)
நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை பெய்த நிலையில், இன்றும் கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வேலூர், திருச்சி, தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் பரவலாக இன்று காலை மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேட்டுப்பாளையத்தில் சூறைக் காற்றுடன் மழை பெய்து, மரம் முறிந்து விழுந்ததாகவும், மின் கம்பங்கள் சேதமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால், இந்த இரு மாவட்டங்களில் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கன்னியாகுமரியில் நேற்று இரவு விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு மணி நேரத்தில் 16 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பல வீடுகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியில் உள்ளனர்.

நெல்லை, குமரி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்