தமிழகத்தில் கிரானைட் கடத்தல் வழக்கை வெளி கொண்டு வந்து பிரபலமான ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசியலில் இணைய போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு வேகமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் தற்போதைய அரசியல் சூழலில் படித்தவர்கள், அரசின் உயர்நிலை பதவிகளை வகித்தவர்கள் அரசியலுக்கு வருவது அதிகரித்துள்ளது. முன்னதாக ஐபிஎஸ் பதவியை விட்டு விலகி தற்சார்பு விவசாயத்தில் ஈடுபட்டு வந்த அண்ணாமலை பாஜகவில் இணைந்தது பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதனால் அவரும் அரசியலில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அவரை தங்கள் கட்சியில் இணைத்துக் கொள்ள பல்வேறு கட்சிகள் ஆர்வம் காட்டி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது. முன்னதாக ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்தபோதே அதில் சகாயம் முக்கியமான இடத்தை பெற உள்ளதாக பரவலாக பேசிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் சகாயத்தை மக்கள் நீதி மய்யத்தில் இணைத்துக் கொள்ள மய்யத்தார் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பேசிக் கொள்ளப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.