சென்னை, கடலூர் உள்பட பல நகரங்களில் கடல் சீற்றமாக காணப்படுவதாகவும், பல அடி அளவு உயரத்தில் கடல் அலைகள் எழும்பி வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், திருச்செந்தூரில் மட்டும் கடல் உள்வாங்கியதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மற்றும் கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படும் நிலையில், கடல் பகுதிக்கு செல்ல சென்னை மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடல் கொந்தளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தரங்கம்பாடி கடற்கரையில் கடல் சீற்றமாக இருந்த போதிலும், ஏராளமானோர் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்தும், வீடியோக்களை வெளியிடுவதிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால், அவர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், திருச்செந்தூரில் கடல் சுமார் 50 அடிக்கு உள்வாங்கி உள்ளதாகவும், பக்தர்கள் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. பொதுவாக, அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் திருச்செந்தூரில் கடல் உள்வாங்கும் நிகழ்வு நடைபெறும். ஆனால், இன்று புயல் நேரத்திலும் கடல் உள்வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை திருவான்மியூர் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. காற்று வேகமாக வீசுவதுடன், அலைகள் மேல் எழும்பி கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.