சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அந்நியச் செலாவணி வழக்கில் காணொளி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
ஜெஜெ சேனலுக்கு ஒளிபரப்பு சாதனங்களை வெளிநாட்டிலிருந்து வாங்கியதில் அந்நியச் செலாவணி மோசடி நடந்ததாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
சென்னை எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் சசிகலா ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சசிகலா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குமார், சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கிறார். அவருக்கு முதுகுவலியும் இருப்பதால் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
மேலும் காணொளி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராவதற்கான அனைத்து வசதிகளும் இருப்பதால் சசிகலாவை காணொளி காட்சி மூலம் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
ஆனால் இதற்கு அனுமதியளிக்க அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறினர் மறுத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி விசாரணையில் சசிகலா காணொளி காட்சி மூலம் ஆஜராக அனுமதியளிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டு வழக்கை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.