வேலூர் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவடையும் நிலையில் கருத்து கணிப்புகளை வெளியிடக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பணப்பட்டுவாடாக் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடக்க இருந்த மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதிக்கு மட்டும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து 4 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
இதில் திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய 3 கட்சிகளும் முன்னர் அறிவித்த வேட்பாளரையே மீண்டும் களத்தில் இறக்கியுள்ளனர். இது தவிர சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
மற்ற பெரியக் கட்சிகளான மநீம, அமமுக ஆகிய கட்சிகள் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். இதையடுத்து கடந்த சில வாரங்களாக நடந்து வந்த தேர்தல் பிர்ச்சாரம் இன்று மாலையுடன் முடியவுள்ளது.
இதையடுத்து ஆகஸ்ட் 5 ஆம் தேதி வாக்குப்பதிவும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன. அதோடு பிரச்சாரம் முடிந்தவுடன் கருத்து கணிப்பு வெளியிட தடை விதித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதாவது, இன்று மாலை 6 மணி முதல் கருத்துக்கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்பட, எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், ஊடகங்களில் காட்சிப்படுத்துவது தடை விதிக்கப்படுகிறது என அறிக்கை வெளியிட்டுள்ளார்.