கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. அதிக பாதிப்பு உள்ள பகுதிகளான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மதுரையிலும் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ளதால் இன்று முதல் மதுரையிலும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. ஜூன் 30 வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.
இந்நிலையில் இதுதவிர வேலூர், ராணிப்பேட்டை போன்ற பகுதிகளிலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. நாளை தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். அதில் மாவட்ட நிலவரங்கள் குறித்து ஆராய்ந்து பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்துவது அல்லது தமிழகம் முழுவதிலுமே ஒரு வார காலம் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.