பீகார் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், சிறப்பு சீர்திருத்தம் என்ற பெயரில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இது குறித்து பேசிய ஜன சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரஷாந்த் கிஷோர், "எத்தனை வாக்காளர்களின் பெயர்களை நீக்கினாலும், பா.ஜ.க. மற்றும் நிதிஷ் குமார் வெற்றி பெற போவதில்லை" என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
"எத்தனை பெயர்களை வேண்டுமானாலும் நீங்கள் நீக்கிக்கொள்ளுங்கள். பீகார் மக்கள் தவறான வாக்குறுதிகளை நம்ப மாட்டார்கள். தேர்தல் ஆணையம் எப்போதுமே எஜமானர் அல்ல, மக்கள்தான் எஜமானர்கள். மக்கள் யாருக்கு வாக்களிப்பார்களோ அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்" என்று பிரஷாந்த் கிஷோர் கூறினார்.
எவ்வளவு பெயர்களை நீக்கினாலும், மீதியுள்ள வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் கூட, பா.ஜ.க.வுக்கும் நிதிஷ் குமாருக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.
அதே சமயம், ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகிய இருவரையும் பிரஷாந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்தார். "ராகுல் காந்தி ஒரு நாள் கூட பீகாரில் தங்கியது இல்லை. இப்போது வாக்குகள் தேவை என்பதால் அவர்கள் அடுத்தடுத்து பீகாருக்கு வருகிறார்கள். பீகார் மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்" என்று அவர் சாடினார்.