ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பணியாற்றும் தமிழகத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எஃப். பெண் வீரர் ஒருவரின் வீட்டில் நகைகள் திருடப்பட்ட வழக்கில், போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் வீரர் சமூக வலைதளங்களில் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
"இது வெறும் சட்டமீறல் மட்டுமல்ல. தி.மு.க. ஆட்சியில் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரியும்போது, நமது நாட்டின் பாதுகாவலர்கள் உதவிக்காக மன்றாடுகிறார்கள்" என்றும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் பணிபுரியும் சி.ஆர்.பி.எஃப். பெண் காவலர் ஒருவர், தனது திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகைகள், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள அவரது வீட்டில் திருடப்பட்டுள்ளன.
தனது தாய் மாடு மேய்க்கச் சென்றிருந்தபோது இந்த சம்பவம் நடந்துவிட்டதாக தெரிவித்த அவர், போலீஸார் நடவடிக்கை எடுக்காததால், ஜம்மு-காஷ்மீர் எல்லையிலிருந்து கண்ணீருடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "எனது நகைகளை மீட்டுத் தாருங்கள்" என்று அவர் கதறி அழுதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.