இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

Senthil Velan
செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (20:08 IST)
இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை தமிழ்நாட்டிற்கு உள்ளது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழ்நாடு திமுகவும் எனது இரு கண்கள் என தெரிவித்தார். திமுகவின் பவள விழா எனது தலைமையில் கொண்டாடப்படுவது எனக்கு கிடைத்த பெருமை ஆகும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டார். 

தொண்டர்கள் இல்லாமல் நான் இல்லை:

ஒரு இயக்கம் 75 ஆண்டுகளாக கம்பீரமாக இருப்பதற்கு திமுகவின் அமைப்பு முறையே காரணம் என தெரிவித்த அவர், தொண்டர்கள் இல்லாமல் திமுக இல்லை, தொண்டர்கள் இல்லாமல் நான் இல்லை என கூறினார். தொண்டர்களின் மூச்சுக்காற்று, ரத்தம், உழைப்பால் திமுக 75 ஆண்டுகளாக நிலைத்து நிற்பதாக ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். 

தலைவன், தொண்டன் என்று இல்லாமல் உடன்பிறப்பு என்ற கட்டமைப்பு தான் நம்மை இணைத்துள்ளது என்றும் உலகில் எந்த கட்சியிலும் இல்லாத சிறப்பு நாம் அனைவரும் உடன்பிறப்புகளாக இணைந்திருப்பது தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆணவத்தில் சொல்லவில்லை:
 
வெள்ளி விழா, பொன் விழா, பவள விழாக்களை கொண்டாடிய போது, திமுக ஆட்சியில் இருந்தது என்றும் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் போதும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். இன்னும் நூறாண்டுகளுக்கு திமுகவின் தேவை தமிழ்நாட்டிற்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

அடுத்து வரும் தேர்தல்களிலும் திமுகவே வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்த அவர்,  இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை, தொண்டர்கள் மீதான நம்பிக்கையில் சொல்கிறேன் என்று கூறினார்.

மாநிலங்களுக்கு உரிமைகளை வழங்கும் அரசு மத்தியில அமையவில்லை என குற்றம் சாட்டிய ஸ்டாலின், முழு அதிகாரம் பெற்ற மாநிலங்களாக உருவாக்க வேண்டும் என்பதே திமுகவின் குரலாக இருக்கும் என்று கூறினார். 


ALSO READ: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா.! ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அதிஷி.!!

கிரீன்  பண்ணுக்கு எவ்வளவு வரி என்பதை கூட கேட்க உரிமை இல்லை என விமர்சித்த அவர், மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு குறைந்த அளவில்தான் நிதி வழங்குகிறது என்று குற்றம் சாட்டினார். மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்