தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் - எல்லையில் கேரள பேருந்துகள் நிறுத்தம்

Webdunia
வெள்ளி, 25 மே 2018 (08:54 IST)
தூத்துக்குடி விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 
கடந்த 22ம் தேதி, தூத்துகுடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில்  போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 11 பேர் பலியாகிய நிலையில் நேற்று முன் தினமும் நாளாக துப்பாக்கி சூடு நடந்தது. 
 
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் பலியாகிய நிலையில் மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி அவரும் இறந்ததால் கடந்த இரண்டு நாட்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.  இந்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆலையை மூடிவதற்கு நடவடிக்கை எடுப்போம் என தமிழக அரசு மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் உத்தரவாதம் அளித்துள்ளதால் அங்கு மெல்ல மெல்ல அமைதி திரும்பி வருகிறது.
 
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், இடதுசாரி அமைப்புகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு கொடுத்துள்ளனர். அதேபோல், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையனும் இன்று கடையடைப்பு நடைபெறும் என அறிவித்துள்ளார். இதில் அனைத்து வணிகர்களும் பங்கேற்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
ஆனால், பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, திமுக தொடர்பான சில அமைப்புகளின் கீழ் வரும் பேருந்துகள் மட்டும் இயக்கப்படவில்லை. 
 
இந்நிலையில், பிறமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரும் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. கேரளாவிலிருந்து வரும் பேருந்துகள் நாகர்கோவிலிலும், பெங்களூர் பேருந்துகள் ஒசூர் அருகேயும் நிறுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி சென்னையில் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தலைமைச்செயலகம், டிஜிபி அலுவலகம், மெரினா உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்