தூத்துக்குடி கலவரம் எதிர்கட்சிகளின் திட்டமிட்ட சதி - எடப்பாடி விளக்கம்

வியாழன், 24 மே 2018 (13:18 IST)
எதிர்கட்சிகள் மற்றும் சில சமூக விஷமிகளின் தூண்டுதலாலேயே தூத்துக்குடியில் கலவரம் வெடித்தது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

 
தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நேற்று முன்தினம் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 11 பேர் பலியாகிய நிலையில் நேற்றும் இரண்டாவது நாளாக துப்பாக்கி சூடு நடந்தது.   
 
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் பலியாகிய நிலையில் மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி அவரும் இறந்ததால் கடந்த இரண்டு நாட்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. இது தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:
 
நான் ஆய்வு கூட்டத்தில் இருந்த போது, ஸ்டாலின் என்னை சந்திக்காமலேயே அவராக வெளியேறி வேண்டுமென்றே பழி போடுகிறார். தூத்துக்குடி மக்களின் உணர்வுகளை அரசு புரிந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு இன்று மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மக்களை எதிர்கட்சியினர் மற்றும் சில சமூக விரோத அமைப்புகள் மக்களை தூண்டிவிட்டு போராட்டத்தை திசை திருப்பியுள்ளனர். அதனால்தான், சில அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றுவிட்டது. 
 
தற்காப்புக்காகவே பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ஒருவர் அடித்தால் மற்றொருவர் திருப்பி அடிக்கத்தான் செய்வார். மோசமான சூழலின்போது நடவடிக்கை எடுத்து அமைதியை நிலைநாட்ட வேண்டியிருந்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு தொடர் முயற்சி எடுத்து வருகிறது” எனக் கூறினார்.
 
அதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் அவர்களிடம் பல கேள்விகளை எழுப்பினர். ஆனால், எதற்கும் பதிலளிக்காமல் அவர் வேகமாக சென்றுவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்