எண்களில் இல்லை ; எண்ணங்களில்தான் இருக்கிறது – தேமுதிக க்ளீன் போல்டு !

Webdunia
திங்கள், 11 மார்ச் 2019 (08:31 IST)
அதிமுக –தேமுதிக இடையில் உருவாகியுள்ள கூட்டணிக் குறித்து கருத்து தெரிவித்த பிரேமலதா ’எண்களில் இல்லை… எண்ணங்களில் உள்ளது இந்தக் கூட்டணி’ எனக் கூறியுள்ளார்

தமிழ்நாட்டில் உள்ள மாநிலக் கட்சிகள், சமுதாயக் கட்சிகள் மற்றும் தேசியக் கட்சிகள் ஆகியவை எல்லாம் திமுக மற்றும் அதிமுக ஆகிய அணிகளில் இறங்கி தங்களுக்கான சீட்களைப் பெற்று தங்களுக்கான கூட்டணி ஒதுக்கீட்டில் மும்முரமாக வேலை செய்துகொண்டிருக்கும் வேளையில் கூட தேமுதிக கூட்டணி தொடர்பான எந்த முடிவையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.

ஒரே நேரத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டுக் கட்சிகளோடும் தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் அவர்களின் ஒட்டுமொத்த பிம்பமும் டேமேஜ் ஆனது. இதுகுறித்த திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் ஆகியோரின் குற்றச்சாட்டுகள் நேற்று முழுவதும் தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பின.

இதனால் அதிமுக தேமுதிக நமக்குத் தேவையா என்று யோசிக்க ஆரம்பித்தது. அதையடுத்து திமுகவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக தேமுதிக வினரால் நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசியது, அதிமுக அமைச்சர்களை விமர்சனம் செய்தது என அவரும் தன் பங்கிற்கு சொதப்பினார். இந்நிலையில் தமிழக அரசியலில் தற்போதைய தேமுதிக வின் மொத்த இமேஜும் காலி. மேலும் விஜயகாந்த் உடல்நலம் இல்லாத போது அவரைப் பொம்மைப்போல வைத்து சுதீஷும் பிரேமலதாவும் தவறான அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

அதிமுக கூட்டணியில் உள்ள பாமக தரப்பில் கொடுக்கப்படும் அழுத்தம்தான் காரணம் என கூறப்படுகிறது. தேமுதிக வின் சரிந்து வரும் வாக்கு வங்கியைக் காட்டி பாமக தலைமை அதிமுகவிற்கு அழுத்தம்  கொடுத்து வந்தது. ஆனால் விஜயகாந்தை உள்ளே இழுக்காவிட்டால் அவர் தங்களை வாக்குகளை பிரித்துவிடுவார் என்ற ஒரேக் காரணத்திற்காக யோசித்தது அதிமுக. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் சொதப்பல்களால் தேமுதிக எத்தனை சீட்கள் தந்தாலும் போதும் என்ற நிலைக்குக் கீழ் இறங்கி வந்துவிட்டது. அதனால் அதிமுக கூறிய 4 சீட்டுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. முன்பு அவர்கள் தீவிரமாகக் கேட்ட ராஜ்யசபா சீட் கூட வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு இறங்கி வந்துள்ளனர்.

2011-ல் தமிழக அரசியலின் உச்சத்தில் இருந்த தேமுதிக,  2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டசபைத் தேர்தல் என தனது வீழ்ச்சியை சந்தித்து இப்போது க்ளீன் போல்டாகி இருப்பதே நிதர்சனம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்