சசிகலாவை மதிக்காமல் புறக்கணிக்கும் தினகரன்!

Webdunia
சனி, 25 மார்ச் 2017 (14:49 IST)
அதிமுகவின் பொதுச்செயலாளராக பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைக்கு செல்லும் முன்னர் அவரது அக்கா மகன் டிடிவி தினகரனை அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக நியமித்தார்.


 
 
ஆனால் டிடிவி தினகரனால் சிறையில் உள்ள சசிகலா புறக்கணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சசிகலா தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணியினருடன் மல்லுக்கட்டும் தினகரன் தரப்பு தற்போது ஆர்கே நகர் தேர்தல் போஸ்டர்களில் சசிகலாவின் படத்தை புறக்கணித்து வருகின்றனர்.
 
சசிகலா தான் பொதுச்செயலாளர் என கூறும் தினகரன் தரப்பினர் அவரது புகைப்படத்தை ஏன் திட்டமிட்டு புறக்கணிக்கின்றனர் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
 
தினகரன் தரப்பில் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களில் தினகரன் புகைப்படம், ஜெயலலிதா புகைப்படம், தொப்பி சின்னம் போன்றவை அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் சசிகலா புகைப்படம் மட்டும் இல்லை என சசிகலா ஆதரவாளர்கள் ஆத்திரத்தில் உள்ளனர்.


 
 
ஏற்கனவே தினகரன் ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடுவதை சசிகலா விரும்பவில்லை எனவும். தினகரன் எதிர்ப்பையும் மீறி தன்னிச்சையாக களமிறங்கியிருப்பதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த சசிகலா புகைப்படம் புறக்கணிப்பு இருவருக்கும் இடையே புகைச்சல் இருப்பதை காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்