மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயில் தன்னிடம் இருப்பதாகவும், அதில் அவர் தனக்கு போயஸ் கார்டன் உள்ளிட்ட 8 சொத்துக்களை எழுதி வைத்துள்ளதாக அவரது அண்ணன் மகன் தீபக் கூறியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அதுமுதல் அவரது சொத்துக்கள் இனி என்ன ஆகும் அவற்றை யார் அனுபவிக்க போகிறார். ஜெயலலிதா உயில் ஏதாவது எழுதி வைத்திருந்தாரா என பல்வேறு கேள்விகள் எழுந்து வந்தன.
இந்நிலையில் அவரது அண்ணன் மகன் தீபக் தனியார் ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில், எனது அத்தை ஜெயலலிதா எழுதிய உயில் என்னிடம் தான் உள்ளது. அந்த உயிலில் அனைத்து சொத்துக்களும் எனது பெயரிலும் எனது சகோதரி தீபா பெயரிலுமே உள்ளது.
அதில், சென்னை போயஸ் கார்டன் வீடு, சென்னை பார்சன் காம்ப்ளக்சில் உள்ள இரண்டு கட்டடங்கள், சென்னை செயிண்ட் மேரிஸ் சாலையில் உள்ள ஜெயலலிதா வீடு, கொடநாடு எஸ்டேட், ஐதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டம் உள்ளிட்ட எட்டு சொத்துக்கள் என்னுடைய பெயரில் உள்ளது என தீபக் கூறியுள்ளார்.