ஆர்.கே.நகரில் போட்டியிட இருக்கும் தீபா, சசிகலா?: அனல் பறக்கும் அரசியல் களம்!

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2016 (14:36 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். இதனால் தமிழக அரசியலிலும் அதிமுகவிலும் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகி உள்ளது. இந்த சூழலை பலரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர்.


 
 
முதல்வராக இருந்த ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்நிலையில் அவர் மரணமடைந்துள்ளதால் அந்த தொகுதிக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்.
 
இந்த தொகுதியில் அதிமுகவை தற்போது தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறப்படும் சசிகலா போட்டியிட அதிக வாய்ப்பிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூடி இது தொடர்பான முக்கிய முடிவு எடுக்கும் என கூறப்படுகிறது.
 
இதனையடுத்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா கூறும்போது, சசிகலா கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிட தயாராக இருப்பதாகவும், சசிகலாவால் பாதிக்கப்பட்ட கட்சியின் சீனியர்கள் அவருக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறினார். ராஜ்யசபா உறுப்பினராக இருப்பதால் அவர் அதிமுக பொதுக்குழு உறுப்பினராக இருக்கிறார்.
 
இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பல வகைகளில் சசிகலாவுக்கு நெருக்கடிகள் கொடுத்து வருகிறார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது அவரை பார்க்க சசிகலா அனுமதிக்காததால் கடும் கோபத்தில் இருக்கிறார் தீபா.
 
நான் தான் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்பதை நிரூபிக்க ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக அவர் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் அவருக்கு பக்கபலமாக சிலர் செயல்படுகின்றார்கள் எனவும் தகவல்கள் வருகின்றன.
அடுத்த கட்டுரையில்