வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி இருப்பதை அடுத்து தமிழகம் மற்றும் ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாகவும், டிசம்பர் 12ஆம் தேதிக்கு மேல் தமிழக கடற்கரையை நோக்கி இந்த காற்றழுத்த தாழ்வு நகரக்கூடும் என்றும், அதன் பின்னர் இலங்கை அருகே கரையை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, டிசம்பர் 11-12 ஆகிய இரண்டு நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஆந்திர மாநில கடலோர பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, டிசம்பர் 12ஆம் தேதிக்கு மேல் தமிழக மற்றும் இலங்கை நோக்கி நகரும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு புயலாக உருவாக தற்போது சாத்தியமில்லை என்றாலும், இனிவரும் நாட்களில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.