புயல் பாதித்த மூன்று மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கம் போல் அரையாண்டு விடுமுறை வழங்கப்படும் என்றும், விடுமுறை முடிந்த பிறகு மட்டுமே இந்த மூன்று மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கடலூர், விழுப்புரம், மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், இந்த மூன்று மாவட்டங்களிலும் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மற்ற மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு டிசம்பர் 9ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், இந்த மூன்று மாவட்டங்களில் மட்டும் அடுத்த ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தேர்வுகளை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மூன்று மாவட்டங்களில் தனியாக தேர்வுகளை நடத்த ஆயத்த பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. அதேவேளை, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை காலமாக இருப்பதைப் போல, இந்த மூன்று மாவட்டங்களுக்கும் அந்த விடுமுறை பொருந்தும் என்றும், விடுமுறை முடிந்ததும் தேர்வுகள் நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும், மேற்கண்ட மூன்று மாவட்டங்களில் மழை நீர் வடிந்த பிறகு, பள்ளிகள் திறந்தவுடன் செய்முறை தேர்வுகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.