கடந்த சில நாட்களுக்கு கள்ளக்குறிச்சியில் நடந்த அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் குமரகுரு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, காவல்துறையிடம் முறையான அனுமதி வாங்கி ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி, அதில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதன்பின் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் பொதுக்கூட்டம் நடத்திய குமரகுரு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.