கோவை மாவட்டத்தில் பொறியியல் கல்லூரி ஒன்றில் படிக்கும் ஒரு மாணவனும் அதே கல்லூரியில் படிக்கும் மற்றொரு மாணவியும் படிக்கும் போதே காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களை தற்போது அந்த கல்லூரி சஸ்பெண்ட் செய்துள்ளது.
கோவை சிவானந்த காலனி பகுதியைச்சேர்ந்த சுதேஷ் என்ற மாணவன் கோவை குரும்பபாளையத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் டிப்ளமோ முடிந்து நேரடியாக பொறியியல் படிப்பில் சேர்ந்து, தற்போது மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவருக்கும் அன்னூரை சேர்ந்த அதே கல்லூரியில் படிக்கும் சாந்தினி மெகபூப் ஜான் என்ற மாணவிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
காதலித்து வந்த இந்த இளம் ஜோடிகள் கடந்த மாதம் 28-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இதனையடுத்து இவர்களை இரு வீட்டினரும் மன்னித்து ஏற்றுக்கொண்டு மீண்டும் படிக்க கல்லூரி நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் கடந்த 30-ஆம் தேதி எந்த மூகாந்திரமும் இல்லாமல் இருவரையும் சஸ்பெண்ட் செய்வதாக கடிதத்தில் குறிப்பிட்டு அனுப்பி வைத்துள்ளது.
கல்லூரி நிர்வாகம் அளித்த உதவித்தொகையினை தற்போது தராமல் முழுத்தொகையையும் செலுத்த நிர்பந்திப்பதாகவும், எதுக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டோம் என்ற காரணமும் தெரியாததால் கல்லூரி மீது நடவடிக்கை எடுத்து உதவித்தொகை பெற்று இருவரும் படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு அளித்துள்ளனர்.