சிறார்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்! – தமிழகம் இரண்டாவது இடம்!

Webdunia
வெள்ளி, 27 டிசம்பர் 2019 (09:55 IST)
சிறுவர்கள் மீதான பாலியல் குற்ற புகார்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாக அதிர்சிகரமான புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் சிறார்களுக்கெதிரான வன்முறைகளை தடுப்பதற்காக அவசர கால சேவை மையமான ”சைல்டு லைன்” செயல்பட்டு வருகிறது. கடந்த 2019ம் ஆண்டில் அதிகளவு புகார்கள் வந்த மாநிலங்களை சைல்டு லைன் பட்டியலிட்டுள்ளது.

அதில் 1742 புகார்களுடன் கேரளா முதல் இடத்திலும், 985 குற்ற புகார்களுடன் தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. சிறார்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டாலோ, அவர்கள் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டாலோ உடனடி நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பை அளிக்க சைல்டு லைன் இந்தியாவில் உள்ள 522 மாவட்டங்கள் மற்றும் 100 ரயில் நிலையங்களில் நடைமுறையில் உள்ளது.

கடந்த 2018-2019ல் மட்டும் சுமார் 60 ஆயிரம் புகார்கள் அளிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் அதிகமாக குழந்தை திருமணம் சார்ந்த புகார்கள் உள்ளதாகவும், அதற்கு பிறகு சிறார் பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளதாகவும் அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம் இரண்டாம் இடத்தில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், சமூக ஆர்வலர்கள் சிலர் தெரிவிக்கும்போது சிறார்கள் துன்புறுத்தல் தொடர்பாக சைல்டு லைனை தொடர்பு கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு தமிழகத்தில் அதிகரித்துள்ளது. மற்ற புள்ளி விவரங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தை விட மற்ற சில மாநிலங்களில் சிறார்கள் மீதான் பாலியல் வன்கொடுமை அதிகரித்திருப்பதாகவும், ஆனால் சைல்டு லைனை அங்கு பலர் உபயோகிப்பதில்லை என்றும் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்