உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் திருமணத்திற்கு பெண்கள் தேடும் இளைஞர்களுக்கு, இளம் பெண்களை கடத்தி ஐந்து லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்து உள்ளதாக ஒரு கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, அவர்களை கடத்தி, மணமகள் தேடும் இளைஞர்களுக்கு அறக்கட்டளை ஒன்று விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பதினாறு வயது சிறுமி ஒருவரை, அறக்கட்டளையைச் சேர்ந்த நிர்வாகிகள் கடத்திய நிலையில், அந்த சிறுமி தப்பித்து போலீசிடம் புகார் அளித்தபோதுதான் இந்த மோசடி தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து போலீசார் அதிரடியாக நடவடிக்கை எடுத்த நிலையில், நான்கு பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இந்தக் கும்பல் பெண்களை கடத்தி திருமணம் ஆகாமல் இருக்கும் இளைஞர்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் வரை விற்பனை செய்துள்ளதாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் அழகு, உயரம் ஆகியவற்றைப் பொருத்து விலை நிர்ணயம் செய்யப்படும் என்றும், அதேபோல் சிறுவயது பெண்கள் இருந்தால் கூடுதல் தொகைக்கு விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்தக் கும்பல் இதுவரை 1500 இளம்பெண்களை கடத்தி, திருமணத்திற்காக விற்பனை செய்து உள்ளார்கள் என்று கூறப்படும் நிலையில், இந்தக் கும்பல் மீது 10 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை கடத்தி இளைஞர்களுக்கு விற்பனை செய்ததாக வெளிவந்திருக்கும் இந்த செய்தி, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.