ஜெயலலிதாவின் கைரேகை: நீதிபதி கேள்வி!

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2017 (13:38 IST)
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் போஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அவரது வேட்பாளர் பி படிவத்தில் இடம்பெற்றுள்ள ஜெயலலிதாவின் கைரேகை உண்மைதானா என உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.


 
 
திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏவாக வெற்றிபெற்ற அதிமுகவின் சீனிவேல் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்கு முன்னரே உடல் நலக்குறைவால் காலமானார். இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் வந்தது.
 
தேர்தலில் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னத்தை ஒதுக்க வேட்புமனுவுடன் படிவங்கள் ஏ மற்றும் பி-இல் வேட்பாளர் எந்தக் கட்சியை சார்ந்துள்ளாரோ, அக்கட்சியின் தலைவரோ அல்லது பொதுச்செயலாளரோ கையெழுத்திட வேண்டும்.
 
அப்போது ஜெயலலிதா மருத்துவமனையில் கையெழுத்து இடமுடியாத நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனவே அதற்கு பதிலாக தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்று ஜெயலலிதாவின் கைரேகை வைக்கப்பட்டது. இதனையடுத்து இரட்டை இலை சின்னத்தை போஸுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. அந்த தேர்தலில் போஸ் வெற்றிபெற்றார்.
 
இதனையடுத்து அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன் நீதிமன்றத்தில் போஸின் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சரவணன் தரப்பில் போஸின் வேட்புமனுவில் ஜெயலலிதாவின் கைரேகை முறைகேடாக பெறப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
 
இந்நிலையில் இன்று நடந்த இந்த வழக்கின் விசாரணையில் வேட்பாளரின் பி படிவத்தில் உள்ள ஜெயலலிதா கைரேகை உண்மையா என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர் அக்டோபர் 6-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்