நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றுவதா.? அரசியல் நாடகம் நடத்தும் திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்.!!

Senthil Velan
சனி, 17 ஆகஸ்ட் 2024 (11:35 IST)
நீட் ரத்து விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றும் விடியா அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  தஞ்சாவூர் மாவட்டம் சிலம்பவேளங்காடு பகுதியைச் சேர்ந்த மாணவர் தனுஷ், கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாததால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
நீட் ரத்து என்ற பெயரில் அரசியல் நாடகம் நடத்தும் விடியா திமுக முதல்வர், தன்னுடைய ஒன்றுக்கும் உதவாத வெற்று விளம்பரப் பேச்சுகளை நம்பி ஏமாந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் மாணவர்களின் ரத்தக் கறைகள் தனது கைகளில் இருப்பதை உணர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 
40 எம்பிக்களை வைத்து நாடாளுமன்றத்தில் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் மு.க ஸ்டாலின் அவர்களே? என்று கேள்வி எழுப்பி உள்ள எடப்பாடி பழனிச்சாமி,  வாரிசு அமைச்சர் சொன்ன அந்த நீட் ரத்து ரகசியம் எப்போது தான் வெளியில் வரும்? என்றும் இன்னும் எத்தனை மாணவச் செல்வங்கள் உயிரிழப்பதை நாம் பார்க்க வேண்டும்? என்றும் தெரிவித்துள்ளார்.
 
நீட் ரத்து விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றும் விடியா அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அவர், இனியாவது நீட் ரத்து குறித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் ஏதேனும் இருப்பின் மேற்கொள்ளுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
மாணவச் செல்வங்களே- உயிர் என்பது இன்றியமையாத ஒன்று என்றும் அதனை இழக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் உங்கள் மனதில் வரக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். வாழ்வில் பல சோதனைகள் வந்தாலும் அதனை நேரே எதிர்கொண்டு சாதனைக் கற்களாக மாற்றப் பாருங்கள் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். 

ALSO READ: எஸ்.ஐ-யை அரிவாளால் வெட்டிய ரவுடி.! துப்பாக்கியால் சுட்டு பிடித்த காவல்துறை.!!

இந்த உலகத்தில் உங்களுக்கென்ற ஒரு அற்புதமான இடம் எப்போதும் இருக்கும் என்பதை நினைவிற்கொள்ளுங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்