தூத்துக்குடி விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி, போதை பொருட்களால் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலைகள் அதிகரித்து வருவதாக தெரிவித்தார். கசாப்பு கடைகளில் ஆடுகளை வெட்டுவது போல் மனிதர்களை வெட்டுவது அதிகரித்துள்ளது என்றும் தமிழகம் கொலை மாநிலமாக மாறி உள்ளது கவலை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக விமர்சித்த எடப்பாடி பழனிச்சாமி, போலீசாருக்கு முழு சுதந்திரம் அளித்து, சட்டம் ஒழுங்கை சீர்குலைவை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஜனவரி 1ம் தேதி முதல் இதுவரை 565 கொலைகள் நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பெண்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் தி.மு.க., மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.