கீழடி குறித்த ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள வரலாற்று தகவல்களை மத்திய அரசு மாற்ற சொல்வதாக கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வு தமிழர்களின் மரபான நாகரிகம் குறித்த பல்வேறு சான்றுகளை உலகுக்கு அறிவித்த நிலையில், கீழடி குறித்த 982 பக்க ஆய்வறிக்கையை இந்திய தொல்லியல் துறையின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பி வைத்தது. ஆனால் கீழடி ஆய்வறிக்கையில் உள்ள தகவல்களில் பல அறிவியல் அடிப்படையில் நிரூபிக்கப்படாதவை என மத்திய கலாச்சார துறை அமைச்சர் ஷெகாவத் கூறி ஏற்க மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கீழடி அகழ்வாய்வில் கிடைத்த அறிவியல்ரீதியான சான்றுகளையே மாற்ற சொல்லி மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “கீழடி அகழாய்வு அறிக்கையைத் திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானதும் கூட. 982 பக்க ஆய்வறிக்கையில் எழுத்துப்பிழையை வேண்டுமானால் திருத்துவேன், ஆனால் உண்மையைத் திருத்த மாட்டேன். அறிவியல் பூர்வமாக தயாரிக்கப்பட்ட அறிக்கை அது. யூகங்களால் அல்ல. எனது கண்டுபிடிப்பை திருத்தினால் நான் குற்றவாளியாகிவிடுவேன்” என்று கூறியுள்ளார்.
கீழடி அகழாய்வில் அதன் காலம் கி.மு 8ம் நூற்றாண்டு என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதை கி.மு 3ம் நூற்றாண்டு என திருத்துமாறு மத்திய அரசு வலியுறுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K