தற்போது சந்தையில் உள்ள சக்கர நாற்காலிகள் 17 கிலோ அல்லது அதற்கு அதிகமாக இருக்கும் நிலையில், சென்னை ஐ.ஐ.டி. வெறும் 9 கிலோ எடையில் ஒரு சக்கர நாற்காலியை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இது சக்கர நாற்காலியை பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.
'ஒய்.டி. ஒன்' (YD One) என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய சக்கர நாற்காலியின் எடை வெறும் ஒன்பது கிலோதான். எனவே, இதை எளிதாக தூக்கி கொண்டும், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களிலும், பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்து சாதனங்களிலும் கொண்டு செல்வது மிகவும் எளிது. இதில் இணைக்கப்பட்டுள்ள சிறிய சட்டகம், நாற்காலியை எளிதில் தூக்கிக் கொள்ள வசதியாக இருக்கும்.
இந்த சக்கர நாற்காலியின் விலை ₹75,000 முதல் ₹80,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மாற்றுத்திறனாளிகள் மற்றும் சக்கர நாற்காலியை பயன்படுத்தும் வயதானவர்களுக்கு இது மிகவும் வசதியாக இருக்கும் என்று கூறப்படுவதால், மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு பெறும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.