ஆடம்பர கார், அடுக்குமாடி குடியிருப்பு, கிலோ கணக்கில் நகைகள்.. கோடிக்கணக்கில் டெபாசிட்.. எஞ்சினியருக்கு ரூ.250 கோடி சொத்தா?

Siva

வியாழன், 17 ஜூலை 2025 (08:01 IST)
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஓய்வுபெற்ற தலைமை பொறியாளர் ஒருவர் வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனை செய்ததில், ரூ.250 கோடிக்கு அதிகமான மதிப்புள்ள சொத்துகள் அவருக்கு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தெலுங்கானா மாநிலத்தின் ஊழல் தடுப்புப் பிரிவு முரளிதர் ராவ் என்ற ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் வீட்டில் சோதனை நடத்தியது. அப்போது, மெர்சிடிஸ்-பென்ஸ் உட்பட 3 சொகுசு வாகனங்கள், ஒரு பங்களா, ஹைதராபாத் முழுவதும் பல உயர்தர அடுக்குமாடி குடியிருப்புகள், கிலோ கணக்கில் தங்கங்கள், கோடிக்கணக்கில் இருப்பு வைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட சொத்துக்களை பறிமுதல் செய்தனர்.
 
முரளிதர் ராவ் தனது பணியின் போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்ததை அடுத்து, அவர் இல்லத்திலும், அவருக்கு தொடர்பானவர்களின் இடங்களிலும் ஒரே நேரத்தில் 11 இடங்களில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், நான்கு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள், 11 ஏக்கர் விவசாய நிலம், 6,500 சதுர அடி நிலம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், பல வணிகச் சொத்துகள், தனிப்பட்ட கட்டிடங்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர சொகுசு வாகனங்கள், கிலோ கணக்கில் தங்கங்கள் மற்றும் வங்கியில் வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான இருப்புகளையும் கண்டறியப்பட்டது.
 
இதனை அடுத்து, அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். சட்டத்துக்கு விரோதமாக இந்த சொத்துக்களை அவர் பெற்றிருக்கலாம் என்ற சட்டப்பிரிவில் அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடைய சொத்துக்களை கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இப்போது வரை அவருக்கு ரூ.250 கோடி ரூபாய் சொத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிகபட்சமாக சுமார் ரூ.2 லட்சம் சம்பளம் வாங்கும் ஒருவருக்கு ரூ.250 கோடி ரூபாய் சொத்து எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், விசாரணையில் இன்னும் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்