இனி Unreserved பெட்டியில் 150 பேருக்கு மட்டுமே அனுமதி?? ரயில்வே அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் பயணிகள்!

Prasanth K

வியாழன், 17 ஜூலை 2025 (09:26 IST)

இந்திய ரயில்வேயின் முன்பதிவில்லாத பெட்டிகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க 150 பேருக்கு மட்டுமே அனுமதி என்ற புதிய முறையை கொண்டு வர ரயில்வே துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இந்திய ரயில்வேயின் ஆயிரக்கணக்கான ரயில்கள் இந்தியாவின் பல்வேறு வழித்தடங்களிலும் இயங்கி வருகின்றன. பயணிகள் வசதிகேற்ப பாசஞ்சர் ரயில் தொடங்கி எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட், வந்தே பாரத் என பல வகையான ரயில் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட் உள்ளிட்ட ரயில்களில் ஏசி படுக்கை, படுக்கை, முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் என பயணிகள் வசதிகேற்ப பல பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

 

ஆனால் பெரும்பாலான பயணிகள் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிக்கும் நிலையில் ஒரு ரயிலுக்கு அதிகபட்சம் 4 முன்பதிவில்லா பெட்டிகளே உள்ளன. ஒரு முன்பதிவில்லா பெட்டியில் 90 முதல் 100 பயணிகள் வரை பயணிக்க மட்டுமே இருக்கை வசதி உள்ளது. ஆனால் தினசரி சுமார் 300க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவில்லா பெட்டிகளில் நெருக்கிக் கொண்டும், படிகளில் தொங்கிக் கொண்டும் பயணிக்கும் நிலை உள்ளது. இது பல காலமாக பெரும் பிரச்சினையாக இருந்து வரும் நிலையில் முன்பதிவில்லா பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகளிடையே உள்ளது.

 

ஆனால் ரயில்வே துறை தற்போது வேறுவிதமான முன்னோட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதன்படி ஒரு முன்பதிவில்லா பெட்டிக்கு 150 பயணிகளுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படும் என்ற நடைமுறையை கொண்டு வர ஆலோசித்து வருகிறது. இதற்கு முன்னோட்டமாக டெல்லி ரயிலில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் சாதக, பாதகங்கள், பயணிகள் கருத்துகளை கவனித்து இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

 

ஆனால் இதுகுறித்து பயணிகள் அதிருப்தியையே வெளிப்படுத்தியுள்ளனர். உதாரணமாக சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் மாலை நேர ரயிலில் வார இறுதி நாட்கள் என்றால் சென்னையில் மட்டுமே 150க்கும் அதிகமானோர் ஏறுவார்கள். அதில் சிலர் ரயில் செல்லும் வழித்தடத்தில் பிற நிறுத்தங்களில் இறங்கலாம். அப்படியிருக்க சென்னையிலேயே 150 டிக்கெட்டுகள் முடிந்துவிட்டால் பிற நிறுத்தங்களில் ரயிலில் ஏறுபவர்களுக்கு அதைவிட குறைவான டிக்கெட்டுகளே வழங்கப்படும். இது பயணிகளுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்