ராஜஸ்தான் மாநிலத்தில், ஒன்பது வயதுப் பள்ளி மாணவி ஒருவர் மதிய உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதே திடீரென மயங்கி விழுந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் ஒன்பது வயது நிரம்பிய பிராச்சி குமாவத் என்ற நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி, வழக்கம் போல நேற்று பள்ளிக்கு சென்றார். அவர் பள்ளி நுழைவாயிலில் உள்ள கேமரா முன்பு தன்னை அறிமுகப்படுத்தி சிரித்து கொண்டே பேசிய சி.சி.டி.வி. காட்சிகளும் பதிவாகியுள்ளன. அதன் பின்னர் சாதாரணமாக இருந்த நிலையில், மதிய உணவு இடைவேளையின் போது தனது உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.
இதனை அடுத்து ஆசிரியர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவருக்கு மூச்சுத்திணறல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாகவும், ரத்த அழுத்தம் மற்றும் நாடித் துடிப்பு இல்லை என்றும் மருத்துவர்கள் கூறினர். இருப்பினும் அவரை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் எடுத்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுமி உயிரிழந்தார்.
அந்த சிறுமிக்கு பிறவியிலேயே இதய நோய் அல்லது வேறு கோளாறு இருந்திருக்கலாம், பெற்றோர் அதை கவனிக்காமல் இருந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால், பெற்றோர்கள் அதை மறுத்தனர். "தங்கள் குழந்தைக்கு எந்தவிதமான நோயின் அறிகுறியும் இருந்ததில்லை என்றும், அவரது மரணம் எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது" என்றும் தெரிவித்தனர்.