முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதாகவும், இது சம்பந்தமாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் தலைமைசெயலர் ராமமோகன் ராவ் ஆகியோரை விசாரிக்கவேண்டும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சண்முகம் கூறியதாவது:
அப்போலோ மருத்துவமனையை உல்லாச விடுதியாக மாற்றி 1 கோடி ரூபாய் அளவுக்கு இட்லி சாப்பிட்டது யார் என்று காரசாரமாக கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம். ஆனால் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோகிராம் செய்யக்கூடாது என யார் சொன்னது என்று தெரிய வேண்டும். அம்மாவின் மரணத்தில் மர்மம் இருப்பது உறுதியாகி உள்ளது. எனவே சிறப்பு விசாரணைக் குழு அமைத்து இதில் தொடர்புடையவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்று சி.வி.சண்முகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் ஜெயலலிதாவின் மரணத்தில் சசிகலாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் சண்முகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரே கட்சியில் உள்ளவர்களே இப்போது ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டு கூறிவருவதால் ஜெயலலிதாவின் மரணத்தில் இதுவரை வெளிப்படாத பல மர்மங்கள் இருப்பதாகவே பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பது உண்மைதான் என்றும் இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு உண்மை தெரியவரும். என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.