காப்பி பேஸ்ட் .. சொந்தமாக ஒரு அறிக்கை கூட வெளியிட முடியவில்லையா? ஈபிஎஸ்-க்கு கண்டனம்..!

Mahendran
திங்கள், 20 ஜனவரி 2025 (12:05 IST)
நேற்று இரவு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து எடப்பாடி பழனிச்சாமி பெயரில் இன்று வெளியாகி இருப்பதை அடுத்து சொந்தமாக ஒரு அறிக்கை கூட வெளியிட முடியவில்லையா?  என நெட்டிசன்கள் கேலி, கிண்டல் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கனிம வள கொள்ளை தொடர்பாக நேற்று இரவு 10 மணிக்கு அண்ணாமலை தனது சமூக வலைதளத்தில் ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார். கிட்டத்தட்ட அதே அறிக்கை ஒரு சில சொற்கள் மட்டும் மாற்றி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சமூக வலைதள பக்கத்தில் காப்பி பேஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

ஒரு மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவர் அறிக்கையை சொந்தமாக தயாரிக்க முடியவில்லையா? இன்னொரு அரசியல் கட்சி தலைவரின் அறிக்கையை காப்பி பேஸ்ட் செய்து உள்ளாரே என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை இதோ:

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்த, மாவட்ட அமெச்சூர் கபடி கழகச் செயலாளரும், சிறந்த சமூக ஆர்வலருமான திரு. ஜெகபர் அலி அவர்கள், கனிம வளக் கொள்ளையர்களால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில், மோடி கபடி லீக் போட்டிகள் சிறப்பாக நடைபெற, முக்கிய பங்காற்றியவர் திரு. ஜெகபர் அலி அவர்கள். இயற்கை வளப்பாதுகாப்பு, கனிமவளங்களின் கொள்ளையைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு தளங்களில் அக்கறையுடன் செயல்பட்டவர்.

கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப் பலி கொடுத்திருக்கிறார்கள்.

இயற்கை வளங்களைக் காக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் பாடுபட்டவர் உயிரை எடுக்குமளவுக்கு, தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கும், கொள்ளையர்களுக்குமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் எனக் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க முயன்றவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றால், ஆட்சிக்கு வந்த பத்தாவது நிமிடத்தில் மணல் கொள்ளைக்குச் செல்லலாம் என்று கூறியே ஆட்சிக்கு வந்த திமுக கொடுத்த தைரியம் இன்றி வேறென்ன?

கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு. திரு. ஜெகபர் அலி அவர்கள் இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை மடைமாற்றலாம் என்ற எண்ணம் இருந்தால், மிக மோசமான விளைவை திமுக அரசு எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறேன்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்