ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் புறக்கணித்துள்ளன. குறிப்பாக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்தது அதன் தொண்டர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் புறக்கணித்துள்ளன. இதனால், தற்போது தேர்தல் களத்தில் திமுகவும் நாம் தமிழர் கட்சியும் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, இடைத்தேர்தலை புறக்கணிப்பது தவறான முடிவு என்று கூறினார். மேலும், மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக அரசு உருப்படியாக எதையும் செய்யவில்லை என்றும், வீண் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் சசிகலா குற்றம்சாட்டினார். திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை அவர்கள் செய்கிறதை பாமர மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.