தமிழக பாஜகவில் பிரபலமான முகங்களை இணைத்து அந்த கட்சியை தமிழகத்தில் இன்னும் ஆழமாக வேரூன்ற பாஜக முயன்று வருவதாக கூறப்படுகிறது. தற்போது கௌதமி மற்றும் குஷ்புவை தங்கள் கட்சியில் சேர்க்க பாஜக தீவிரமாக இருப்பதாக செய்திகள் வருகின்றன.
பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக கருத்து சொல்லி காங்கிரஸ் கட்சியில் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார் அந்த கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு. தமிழக காங்கிரஸிலும், தேசிய காங்கிரஸிலும் குஷ்புவின் இந்த கருத்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக தலைமையிடம் புகார்கள் செல்வதாகவும் கூறப்படுகிறது.
குஷ்பு கூறியது அவரது சொந்த கருத்து என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். ஆனால் தமிழக பாஜக தலைவர்கள் குஷ்புவுக்கு ஆதரவாக கருத்து சொல்லி வருகின்றனர். தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணான், எச்.ராஜா என தமிழக பாஜக தலைவர்கள் குஷ்புவுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்.
அதே நேரத்தில் குஷ்புவுக்கு ஆதரவாக பேசி காங்கிரஸ் கட்சியை சீண்டியும் வருகின்றனர். குஷ்புவுக்கு காங்கிரஸ் கட்சியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை பாஜகவில் இழுக்கவும் முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் குஷ்பு பாஜகவில் இணையமாட்டார் என்பதே பலருடைய கருத்தாக உள்ளது.
மேலும், நடிகை கௌதமியையும் பாஜகவில் இணைத்து அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பை கொடுக்கவும் பாஜக தரப்பில் முயற்சிக்கப்படுவதகவும் கூறப்படுகிறது. திரைப்பட பிரபலங்களை குறிவைத்து அவர்களை பாஜகவில் சேர்த்து தமிழக பாஜகவை வளர்க்க திட்டம் தீட்டியிருப்பதாக பரவலாக பேசப்படுகிறது.