கவர்னரின் செயல் கூட்டாட்சி மாண்பிற்கே விரோதமானது: ஆதவ் அர்ஜூனா

Siva

திங்கள், 6 ஜனவரி 2025 (14:58 IST)
தமிழக ஆளுநர் சட்டமன்றத்தை விட்டு வெளியேறியது தமிழர்களின் இறையாண்மையை அவமதித்தது மட்டுமின்றி அரசமைப்பு வழங்கியுள்ள கூட்டாட்சி மாண்பிற்கே விரோதமானது என ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

இந்திய நாட்டின் இறையாண்மை மற்றும் அரசியலமைப்பு மாண்பின் முதன்மை அடையாளங்கள் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள். நாடாளுமன்றத்தின் வழிமுறைகளைப் போல் மாநில சட்டமன்றங்களுக்கும் மாநிலத்திற்கே உரிய நடைமுறைகளும் தனித்துவங்களும் உள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்றம் உட்பட எந்தவொரு பொது நிகழ்விலும் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும் நிறைவில் தேசிய கீதம் பாடுவதும் காலம்காலமாக தொடரும் மரபு. அப்படியிருக்கையில், சில உள்நோக்கங்களுடன் தமிழக ஆளுநர் சட்டமன்றத்தை விட்டு வெளியேறியது தமிழர்களின் இறையாண்மையை அவமதித்தது மட்டுமின்றி அரசமைப்பு வழங்கியுள்ள கூட்டாட்சி மாண்பிற்கே விரோதமானது.

ஆளுநர் அவர்கள் தொடர்ந்து இதுபோன்று செயற்பட்டு வருவது மக்களாட்சி கடமைக்கு எதிரான போக்காக இருந்து வருகிறது. மக்கள் மன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதையை வழங்குவதே ஆளுநர் பதவிக்குரிய மாண்பு. அதனை மீறும் வகையில் தொடர்ந்து செயற்படும் ஆளுநரின் போக்கு அவர் பொறுப்பிற்கும் ஜனநாயகத்திற்கும் அழகல்ல.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்