வைரமுத்துவின் நாக்கை வெட்டினால் ரூ. 10 கோடி - நயினார் நாகேந்திரன் திமிர் பேச்சு

Webdunia
புதன், 17 ஜனவரி 2018 (21:01 IST)
கவிஞர் வைரமுத்துவின் நாக்கை வெட்டினால் ரூ.10 கோடி பரிசு அளிக்கப்படும் என பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ள விவகாரம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கவிஞர் வைரமுத்து வைணவ பெண் கடவுள் ஆண்டாள் பற்றி தவறான  வார்த்தையை குறிப்பிட்டு பேசியதாக சர்ச்சை எழுந்தது. அதனை தொடர்ந்து, பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலரும் வைரமுத்துவிற்கு எதிராக கருத்து தெரிவித்தனர். அதுகுறித்து வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்பும் எதிர்ப்பு குரல் இன்னும் அடங்கவில்லை.  வைரமுத்துவிற்கு எதிராக பல இந்து அமைப்பினர் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
 
வைரமுத்துவின் கருத்துக்கு பிரபல நாட்டுப்புற பாடகியான  விஜயலட்சுமி தன் எதிர்ப்பை தெரிவித்ததோடு உண்ணாவிரதமும் இருந்து வருகிறார்.  மேலும், ஆண்டாள் பற்றி தவறாக பேசியதற்காக, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சன்னதியில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும் வரை நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என  மணவாள மாமுனிகள் சன்னதியின் ஜீயர் சடகோப ராமானுஜர் நேற்று கூறியிருந்தார். அதன் பின்பும் வைரமுத்து மன்னிப்பு கேட்கவில்லை. எனவே, இன்று காலை 9 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் சன்னதியில் அவர் உண்ணாவிரதத்தை துவங்கியுள்ளார்.

 
இந்நிலையில், பாஜக சார்பில் நெல்லையில் நடந்த போராட்டத்தில் பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் “ஆண்டாள் பற்றி வைரமுத்து பேசியதை மன்னிக்கவே முடியாது. இனி வரும் காலங்களில் இந்துக்களை பழித்து பேசினால் அவர்களை கொலை செய்ய வேண்டும். ஆண்டாளை பற்றி தவறாக பேசிய வைரமுத்துவைன் நாக்கை வெட்டினால் அவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு தரப்படும் என அவர் தெரிவித்தார். மேலும், நான் தவறாக பேசினால் போலீசார் என் மீது வழக்கு போடுவார்கள். ஆனால், வைரமுத்து மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என அவர் கேள்வி எழுப்பினார்.
 
நயினார் நாகேந்திரனின் பேச்சு தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்