அதிமுகவுடனான கூட்டணி அண்ணாமலை பிரச்சினையாக இருப்பதால் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்க பாஜக தலைமை ஆலோசித்து வருவதாக கிசுகிசுக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. ஆனாலும் அதன் பின்னர் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுகவினருக்கும் ஏற்பட்ட உரசல் காரணமாக கூட்டணியிலிருந்து வெளியேறிய அதிமுக, நாடாளுமன்ற தேர்தலில் தனிக் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.
இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக தலைமை ஆர்வம் காட்டி வருகிறது. இதுகுறித்து பாஜக மத்திய அமைச்சர் அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பின்போதும், நிர்மலா சீதாராமன் - செங்கோட்டையன் சந்திப்பின்போதும் பேசப்பட்டதாகவும், ஆனால் அண்ணாமலை தலைவராக இருக்கும் வரை அதிமுக - பாஜக கூட்டணி சாத்தியமில்லை என அதிமுகவினர் மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிமுகவுடனான கூட்டணிக்காக வேறு வழியே இல்லாமல் அண்ணாமலையை மாற்ற பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. மேலும் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு ஏற்கனவே தனியாக கட்சி நடத்திய, அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த, அதிமுகவினருடன் சுமூக உறவில் உள்ள சரத்குமார் சரியான தேர்வாக இருப்பார் என பேசிக் கொள்ளப்படுகிறதாம்.
அவர் கடந்த ஆண்டில்தான் தனது கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் சேர்ந்தார். அதனால் நீண்ட காலமாக பாஜகவில் உள்ள நயினார் நாகேந்திரன் தலைவருக்கு சரியாக இருப்பார் என தமிழக பாஜகவிலிருந்து அவருக்கு சிபாரிசாக டெல்லிக்கு பரிந்துரைகள் சென்றுக் கொண்டிருப்பதாக தகவல். இன்னும் இரண்டு வாரக் காலத்திற்குள் புதிய தமிழக பாஜக தலைவர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K