தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 25 இடங்களில் நேரடியாக போட்டியிட உள்ளதாக பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தொடர்ந்து இரு முறை ஆட்சியமைத்த பாஜக மூன்றாவது முறையாக மீண்டும் நரேந்திர மோடியை பிரதம வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொள்கிறது. இதற்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. மாநில வாரியாக முக்கிய பிரமுகர்கள் நிற்கும் தொகுதிகள் குறித்த அந்த பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறவில்லை.
தமிழக பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் மாநில கட்சிகளுடன் தீவிர பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகிறது. நேற்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை பாஜக தலைவர்கள் மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் “தமிழ்நாட்டில் பாஜக 25 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடும். மீத இடங்களில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும். திருநெல்வேலி தொகுதியில் என்னை வேட்பாளராக நிறுத்தினால் போட்டியிட தயாராக உள்ளேன்” என பேசியுள்ளார்.