தயாநிதி மாறனை காணவில்லையா? மத்திய சென்னையில் பரபரப்பு பிட் நோட்டீஸ்!...

Webdunia
வியாழன், 21 மார்ச் 2019 (07:47 IST)
மத்திய சென்னை திமுக வேட்பாளராக தயாநிதி மாறன் மீண்டும் களமிறங்கிய நிலையில் திமுகவினர் அந்த தொகுதியில் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். உதயநிதி உள்பட ஒருசில பிரபலங்களை சந்தித்து வாழ்த்து பெற்ற தயாநிதி மாறனும் பிரச்சார களத்தில் இறங்கவுள்ளார்.
 
இந்த நிலையில் 'தயாநிதி மாறனை காணவில்லை' என்னும் பிட் நோட்டீஸ் மத்திய சென்னை முழுவதும் பரவி வருகிறது. இந்த நோட்டீஸில் தயாநிதி மாறனுக்கும் அவரது சகோதரர் கலாநிதி மாறனுக்கும் உள்ள சொத்துக்கள், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பி.எஸ்.என்.எல் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியது, 2ஜி ஊழல், சன் குழுமத்தின் சொத்து மதிப்பு போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நேரத்தில் மட்டும் மக்கள் முன் தலைகாட்டும் தயாநிதியை தோற்கடிக்க வேண்டும் என்றும் அந்த பிட் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த பிட் நோட்டிஸ்களை மர்ம நபர்கள் விநியோகித்து வருவதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு வேட்பாளரை எதிர்க்க வேண்டும் என்றால் தைரியமாக அவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி காண வேண்டுமே தவிர, இவ்வாறு மறைந்திருந்து பிட் நோட்டீஸ் கொடுப்பது கோழைத்தனமானது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். மேலும் இதுபோன்ற பிட் நோட்டீஸ்களால் தயாநிதி மாறனின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றும் திமுகவினர் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்